காஞ்சி ரொம்பவும் மாறி இருந்தது.
தானியங்கி கார்பரேஷன் வண்டி தெருக்களை சுத்தம் செய்து, மரங்களுக்கு நீர் பாய்ச்சியது. தெரு ஓரத்தில் எல்லா ஊர்களிலும் இருப்பது போல் மெட்டல்- டிடெக்டர்கள். பிராக் அணிந்த ஆண்களும் பனியன்-அண்ட்ராயர் அணிந்த பெண்களும் கும்பலாக அமர்ந்து தனித் தனியே செல்பேசினார்கள்.
மலாய்,லெபனீஸ், மெக்சிகன், ஒரிஎண்டல் சாப்பாட்டுக்கிடையில் ஐயர் இட்லியைத் தேடிக் கண்டுபிடித்தார். சந்தடி இல்லாத ஒரு சந்தில் ஒரு டீக்கடை தென்பட்டது.
அங்கே தினகரனுக்குப் பின்னால் இருந்த ஒருவரிடம், "ஏங்க! ஏர்போட்டுக்கு எப்படி போகணும்?" என்றார்.
டீக்கடை ஆசாமி தினகரனை மெல்ல கீழே வைத்து ஐயரை உற்று நோக்கினார்.
"ஏர்போர்ட்டுக்கு.. எப்படி.. போகணும்?" என்று சைகையிலும் கேட்டார் ஐயர்.
ஆசாமி எழுந்து ஓடி, சந்தில் மறைந்தார்.
"யாரோ லூசு போலிருக்கு.."
மற்றொரு தினகரனிடம் ஐயர் திரும்பினார். "சார்! பாதாள ரயில் ஏங்க ஓடுது?"
அவர் "அதோ!" என்று எதிரே இருந்த குட்டிச் சுவற்றைக் காட்டினார்.
"இங்கயா?" ஐயர் அதிர்ந்தார்.
அந்த சுவற்றில் மஞ்சள் போஸ்டர் "பாதாள பைரவி" பிரமிலா தியேட்டரில் ஐம்பது நாள் ஓடுவதை அறிவித்தது.
"பைரவி இல்ல சார். ரயில். தடம் எல்லாம் கூட புரளுமே..வெடிகுண்டேல்லாம் வேப்பாளே!" ஐயர் தெளிவு படுத்தினார்.
"தெரியாது" மறுபடி ஆசாமி தினகரனில் மூழ்கினார்.
ஐயர் யோசித்தார். "இவாள்லாம் வெளியூர் போல இருக்கு. அதான் தெரியலை. டீக்கடைக் காரரிடம் கேட்போம்"
"சார்! பளை ஓவர் எங்க இருக்கு?" என்றார்.
"கோயிந்து! சார் இந்திரா நகர்ல வோர்க்கு நடக்குது இல்ல? அதப் பாக்க வந்துக்கிறார். கூட்டினு போ" என்று அனுப்பி வைத்தார்.
...
இந்திரா நகரும் மாறி இருந்தது. முழு அத்துவானமாக இல்லாமல், முக்கால் அத்துவானமாக இருந்தது. மிச்ச "கால் வாசியில்" சுமார் நூறு குடிசைகள், இருபது எருமைகள், இருநூறு பொது ஜனங்கள்.
"இந்தா.."என்று கோயிந்து காட்டிய இடத்தில் நான்கு ராட்சச தூண்கள் முக்கால் எழும்பிய நிலையில் வானுக்கு கம்பி நீட்டிக் கொண்டிருந்தன.
"என்னப்பா? ப்லைஒவேர் எங்க?"
"இப்போதானே ஸ்டார்ட் ஆகி இருக்குது. இன்னும் பத்து வர்சம் களச்சு பாக்கணும்.."
"இன்னும் நாலு தூண் வருமா?"
"தா..இல்ல சார்! பெரிய பளை ஓவர் வரது. இப்படிக்கா போய் அப்ப்டீக்கா வரது.."
"அப்ப்டீக்கா" என்று கோயிந்துவின் கை, வரப்போகும் விமான நிலையத்தை இடித்துத் தள்ளியது.
"அங்கே ஏர்ப்போர்ட்?"
"அதான் டிராப் ஆயிடுச்சே? யாரோ வெளிநாட்டுக்காரன் ஏர்போர்ட் கட்டுறேன்னான்.. அப்பாலே ஏதோ குல்மால் ஆயிப்போச்சு. அவன் சுகுர்ராயி ஊருக்கு ஓடிப் போயிட்டான்.."
ஐயர் அப்போது தான் கவனித்தார். ரன்வே இருக்க வேண்டிய இடத்தில் சிறுவர்கள் நிர்பயமாக கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தார்கள். அந்த இடத்தில் எதோ ஒரு வித மணம் வருவதையும் உணர்ந்தார்.
ரயில் வரவேண்டிய இடத்தை கோயிந்து உதவியுடன் தேடிக் கண்டு பிடித்தார்.
அங்கே "Corporation Dumping Yard" என்று கோட்டை எழுத்தில் போர்ட் மாட்டி இருந்தது. தானியங்கி இயந்திரம் காஞ்சி மாநகரின் எல்லாக் குப்பைகளையும் கொண்டு வந்து அங்கே செவ்வனே கொட்டி இருந்தது. ஒரு கோடி ஈக்கள்.
வித்தியாசமான வாசனைக்கான காரணம் ஐயருக்கு புரிந்தது.
"ரயில் என்னப்பா ஆச்சு?"
"அது.. எவனோ கோர்ட்டுல ஸ்டே வாங்கிட்டான். கேஸ் நடக்குது கேஸ் முடிய பத்து வர்சம் ஆயிடும். அப்பால கார்பரேசன் காரன் இந்த இடத்த விட்டு போகணும்.அது ஒரு பத்து வர்சம்.."
"அது வரைக்கும்?" ஐயருக்கு கோபத்தில் உடல் நடுங்கியது.
கோவிந்து விஷயம் புரியாமல், "பஸ்லே போ!" என்றான்.
ஸ்கூல், ஐ.ஐ.டி என்றெல்லாம் கேட்டு, தன்னையே மேலும் வருத்திக் கொள்ள ஐயருக்கு மணம் இல்லை.
"பாவிகள்! இவர்களை நம்பி மொத்த சேமிப்பையும் போட்டுட்டேனே? இந்த குப்பைமேட்டை யார் வாங்குவா? வீட்டக் கட்டவும் முடியாம, விக்கவும் முடியாம..."
ஐயருக்கு ஒரு யோசனை. வந்தது தான் வந்தோம். நிலத்தை ஒரு தரம் பாத்துடுவோம். கிடைத்த ரேட்டுக்கு கொடுத்து தலை முழுகிடுவோம்..
அவரது காணி நிலத்தை கண்டுபிடிக்க இரண்டு மணி நேரம் ஆனது.
அங்கே .. அவர் வீட்டு வாச (இருக்க வேண்டிய இடத்தில்)லில், ஒரு நார்க்கட்டிலில் ஒரு உருவம் இழுத்..துப் போர்த்தி தூங்கிக் கொண்டிருந்தது.
"யாரடா அது?" ஐயர் அதட்டினார்.
போர்வை விலகி உருவம் எட்டிப் பார்த்தது.
"ஆ! கரடி!"
உருவம் மீசைக்கு இடையில் கொஞ்சூண்டு முகமும் வளர்த்திருந்ததால் கரடி இல்லை, மனிதன் என்று தெளிந்தார்.
மனிதன், "இன்னா?" என்றான்.
"பிளாட்டு..எனது.."
"டேய்! பரட்ட, போசு, தீவட்டி, சங்கிலி..." மீசை சகாக்களை அழைத்தது.
அடுத்த நொடி ஐயர் பல திசைகளில் இருந்து பல வித "இன்னா?"க்களால் சூழப்பட்டார்.
"ஹீ!ஹீ! ஒன்னும் இல்ல. சும்மா சுத்திப் பாத்தேன்..நீங்க தூங்குங்கோ..ஹிஹி! என்ன வெயில்" என்று திரும்பி நடந்தார். "இன்னா" செய்தாரை ஒருத்தல்!
சிறுவர்கள் விளையாடும் இடம் வரை ஏதோ யோசனையில் இருந்தவர் கோவிந்து கத்தியதை கேட்டிருக்க வாய்ப்பில்லை:
"சார்! பிளாட்டு வேணுமா சார்! அங்கே போல்பாரைல போட்டுக்கிறான். பீச்சாங்கை பக்கம் பீச்சு. சோத்தாங்கை பக்கம் ஹுண்டாய் ஸோ-ரூமு. ஊட்லேர்ந்து இறங்கி நேரா கார எட்துன்னு பீச்சுக்குப் போய்..சார்! சார்!"