Saturday, May 30, 2009

கெட்ட கனவு!

"உரம் தந்த உத்தமனே!"
"பூச்சிக்கொள்ளியே"
"இன்று உனக்கு ரசாயனம், என்றுமே நீ ஒரு சரித்திரம்"
"பர்மிட் வழங்கும் பரம பிதாவே!"
"லைசென்ஸ் தந்த எடிசனே"
"நீ ஒரு ஆண் மேரி கியுரீ"

-இதெல்லாம் என்ன? அடுத்த வருஷம் அஞ்சாநெஞ்சன் பிறந்த நாளுக்கு (தப்பித்தவறி) மதுரைப் பக்கம் வந்தால் நீங்கள் பார்க்கப்போகும் திருவாசகங்கள்!

அது சரி, அண்ணனுக்கு இங்கிலீஷ் பாடம் நடத்தப் போகும் அந்த கைப்புள்ள யாரோ? யாரு பெத்த புள்ளயோ, எதுக்கும் ஒரு நடை குலசாமியக் கும்பிட்டு தாயத்து கீயத்து வாங்கி கட்டிக்கிட்டு போனா நல்லது! இல்லாட்டிப்போனா இப்படியும் நடக்கலாம்:

இங்கிலீஷ் வாத்தியார் உள்ளே நுழைகிறார். "வணக்கம் அண்ணே! நாந்தான் இங்கிலீஷ் டீச்சர்."

"வாங்க"

டீச்சர் கரும் பலகையை ஸ்டாண்ட் மீது வைத்து எழுதத் துவங்குகிறார்.

"ஏலே! நீ ஒசரத்துல போர்ட வச்சு எழுதுவ, எங்க அண்ணன் தலையை அண்ணாந்து பாக்கணுமோ? எவனா இருந்தாலும் எங்க அண்ணன் தலைக்கு கீழதான்லே இருக்கணும், புரியுதா?"என துவார பாலகர்களில் ஒருவர் சவுண்ட் விடுகிறார்.
"அப்படீன்னா அண்ணனை பெஞ்ச் மேல நிக்கச் சொல்லட்டும்களா?"
"அடீங்க"
"அப்போ எப்படீங்க பாடம் நடத்துறது?"
"அப்படி கேளு! போர்ட கீழ வெச்சிட்டு, முட்டி போட்டுக்கிட்டே எழுது"

ஒரு வழியாக பாடத்தை ஆரம்பிக்கிறார்.
"A"
"எவண்டா அவன் ? அண்ணனை ஏய் போட்டுக் கூப்பிடறது?"
"ஐயோ! சத்தியமா இது அந்த ஏய் இல்லீங்க. இது இங்கிலீஷ் ஏய் "
"டேய்! தமிழ் எவே கூடாதாம், என்கிலீஷுல ஏய் போட்டுக் கூப்புடறியா, மவனே"
"இந்த ஒரு தடவ மன்னிச்சுக்குங்க"

நல்ல நேரம் முடியறத்துக்குள் வேற பாடம் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறார் அந்த அப்பாவி.
"twinkle twinkle little star
how i wonder what you are"

அண்ணன் புருவம் சுருக்குகிறார். "இதை என் போன பிறந்த நாளப்போ கேட்டேனே? வேற மாதிரி இருக்குமே?"

"ங்கொப்புரானே, இதுதாங்க கரெக்டு" நடுங்குகிறார் கைப்புள்ள.
"இதுல என் பேரே வரலையே?"
"வராதுங்க"
"என்ன?"
நாலைந்து அருவாக்கள் back ground இல் உதயமாகின்றன.
"இல்.....லீங்க, வேற மாதிரி வரும். இந்தப் பாடத்தை நாளைக்கு வெச்சுக்குவோம்"

உசிரோட ஊர் போய்ச் சேரணுமே என்ற பயத்தில் எதாவது சாமிப் பாட்டை சொல்லித் தருவோம் என்று ஆரம்பிக்கிறார்.

God bless Mummy,
God bless Daddy,
Help me always
to make them happy"

"மம்மி ?"
"கடவுளே அம்மா நல்லா இருக்கணும் அப்படீன்னு அர்த்தம்"
பின்னணியில் ஒரு தடி காத்த குமரன்,"டேய், நீ அவங்க குரூப்பா?"என்று அலற,
"யாரப்பா அங்கே! அந்த gate ஐ கொஞ்சம் சாத்து"
கைப்புள்ள அதற்குள் ஜன்னல் வழியாக தொபுக்கடீரித்து எஸ்கேப் !

2 comments:

சாய்ராம் கோபாலன் said...

"உரம் தந்த உத்தமனே!" , "பூச்சிக்கொள்ளியே", "இன்று உனக்கு ரசாயனம், என்றுமே நீ ஒரு சரித்திரம்", "பர்மிட் வழங்கும் பரம பிதாவே!", "லைசென்ஸ் தந்த எடிசனே"
"நீ ஒரு ஆண் மேரி கியுரீ"

அனு, கலக்கறே.

மதுரைக்காரன் நல்ல நாளிலேயே கோடுப்போட்ட டவுசர் தெரிய பண்ணற ரவுசு ஜாஸ்தி, இனி கொஞ்சம் கஷ்டம் தான்.

இந்த ராஜாவும் அவருக்கு ஏதோ உறவோ ?

- சாய்ராம்

சாய்ராம் கோபாலன் said...

"அஞ்சாநெஞ்சன்"

அவுங்கப்பன் அஞ்சாகுஞ்ஜன் !!

- Sai