Wednesday, June 24, 2009

இது ஏமி கஷ்டம்!

தெலுங்குப் பெண்மணிகளின் பக்தியை யாராலும் மிஞ்ச முடியாது. வாரா வாரம் ஏதோ ஒரு விரதம் என்று கையில் ஒரு பிளாஸ்டிக் கவருடன் வந்து விடுகிறார்கள். மஞ்சள், குங்குமம், தேங்காய் இத்யாதிகள் அடங்கிய ஒரு மினி பெட்டிக்கடை அந்த பை.

முதல் முறை இந்த பக்த சிரோமனிகளின் ஊர்வலம் வந்த போது, நான் ஊருக்கு புதுசு.
உள்ளே வந்த அம்மாள் கையில் கொஞ்சம் அரிசியைக் கொடுத்தார். வாயில் போடப் போகும் முன், தடால் என்று காலில் விழுந்தார். "ஹா" என்று நான் இரண்டு அடி பேக் அடித்தேன்.

"பிளேட் உந்தா?"
"என்துதான்! உள்ள இருக்கு"
"தீசுக்கு ரண்டி "
"அந்த மாதிரி கரண்டி எல்லாம் இல்லையே?"

பக்கத்து வீட்டு அம்மாயி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்: ஒரு பிளேட் எடுத்துட்டு வாங்க!

கொண்டு வந்த பிளேட்டில் பூ, பழம், கடலை(!) ஏதேதோ ஐட்டங்களை வைத்து நீட்டினர்! எனக்கு இந்த விளையாட்டில் எப்போதும் குழப்பம்: எந்தெந்த ஐட்டம்களை எங்கெங்கு வைப்பது?

உ: குங்குமம்!

சிலர் இதை நெற்றியில் நாசுக்காக வைப்பதோடு நிறுத்துகிறார்கள். சிலரோ முன் நெற்றி, நடு நெற்றி,வகிடு, கழுத்து, தாலிச்சரடு, கண், மூக்கு என்று சகட்டு மேனிக்கு கண்ட இடத்தில் அடித்து "சிவப்பு கலரு ஜிங்குச்சா" வாக மாறிவிடுகின்றனர்.

இதேபோல் சந்தனத்தையும் அருள் பார்வையால் கடாக்ஷிப்பவர்களும் இருக்கிறார்கள்;தொண்டை கரகரப்பிற்கு விக்ஸ் தேய்ப்பது போல் தேயப்பவர்களும் இருக்கிறார்கள்.

(நான் பெரும்பாலும் பக்கத்து பிளேட்டை பார்த்து பிட் அடிப்பது வழக்கம். தனியாக மாட்டும் போது தெரியாத ஐட்டம்களை சாய்ஸில் விட்டு விடுவேன்.)

போன வாரம் மங்கள வார விரதம் என்று இரண்டு தல்லிகள் கவரைத் தள்ளிக் கொண்டு வந்தார்கள்.
(மங்கள வாரவிரதமா? எப்போ? என்று கேட்கும் அஞ்ஞானிகளுக்கு: சோம வார விரதத்துக்கு அடுத்த நாள்!)

வழக்கம் போல் சமத்துவபுர தாம்பூலத் தட்டை நீட்டினர். நான் தெரிந்த வஸ்துக்களை முதலில் அட்டெம்ப்ட் செய்து கொண்டிருந்த போது, பள பளவென்று ஒரு கத்தியை நீட்டினர்!

பக்கத்து வீடோ பூட்டி இருந்தது!

"கார்பறேஷான்பிகே!"
(குல தெய்வம்தான். பயத்தில் நாக்கு சிலிப் ஆகி விட்டது!)

இதற்குள் கூட வந்த அடி பெண் (அடியாளின் பெண் பால்) முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்தாள்! ஓஹோ! செத்தப்புறம் கண்ணாடில வேற பாக்கணுமா?

முதல் மாதரசி "காஜல்" ன்று சொன்ன பிறகு தான் மூச்சே வந்தது!

பாவிகளா! இவ்வளவு பெரிய கவர இருக்கு! மை வைக்க டப்பா,
கிப்பா இல்லையா? கத்தி முனைலையா வெப்பாங்க?

1 comments:

geetha said...

chaala undhi.-geedhu