Tuesday, September 29, 2009

ஆர்வக் கோளாறு!

என் தோழி பிருந்தாவின் பையனுக்கு நாலு வயசு. எல்.கே.ஜி படிக்கும் கிருஷ்ணன் காலையில் பாட்டுக் கிளாஸ், சாயங்காலம் மிருதங்கம் என ரொம்ப பிசி.

நாலு வயசுக்கு இதெல்லாம் ஓவரா இல்லை? "பையனுக்கு பாட்டுன்னா ரொம்ப ஆர்வம். அதான்" என்கிறாள் பிருந்தா.

எனக்கு சின்ன வயசில் எங்கள் வீட்டு மடியில் குடியிருந்த ஸ்ரீகாந்த் நினைவு வந்தது. இந்தப் பயலுக்கு அப்போ பத்து வயசு இருக்கும். கொஞ்சம் பாரியான உடம்பு. மத்த பசங்களோட ஓடியாடுவது எல்லாம் கஷ்டம். இருந்தாலும் ஸ்ரீகாந்தின் அம்மாவுக்கு தன் பையன் டான்ஸ், பாட்டு என்று எல்லாத்திலேயும் சாதிக்க வேண்டும் என்று ஒரே ஆசை.

பையன் என்னைக்கோ தெரியாம ப்ரூஸ்லீ படம் பார்க்க, "என் மகனுக்கு கராத்தேன்னா ஒரே ஆர்வம்" என்று சொல்லி, உடனே பக்கத்து காம்பௌண்டில் இருந்த கராத்தே கிளாசில் சேர்த்து விட்டார்.

அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கு பையனை கட்டிலில் இருந்து இழுத்து, கராத்தே ட்ரெஸ்ஸைத் திணித்து, "குளிக்காட்டாப் பரவா இல்லை" என்று முகத்தை அலம்பி, வண்டி பவுடரை அதில் அப்பி, "டாட்டா" காட்டி அனுப்பி விட்டார்.

நான் சி.எ கிளாசுக்கு கிளம்பும்போது தான் ஸ்ரீகாந்தும் அரை தூக்கத்தில், மாவில் விழுந்து எழுந்த உருளைக் கிழங்கு மாதிரி கராத்தே கிளாசுக்கு போவான்.

நானும் ஒரு நாள், பயல் என்னதான் சண்டை போடறான் பாப்போமே, என்று பக்கத்து காம்பௌண்டில் எட்டிப் பார்த்தேன்.எல்லாப் பசங்களும் "ஆய்!ஊய்!" என்று காற்றைக் கிழிக்க, நம்ம ஆள், லேசாக இரண்டு கைகளையும் பாக்யராஜ் டான்ஸ் ஆடுவது போல் அசைத்துக் கொண்டிருந்தான்.

நான் கிளாஸ் முடிந்து பத்து மணிக்கு வீடு திரும்பும் போது, ஸ்ரீகாந்த் "சபையோரை மகிழ்விக்கும் நேரம்". பயல் கராத்தே திறத்தை காட்ட, அவன் அம்மா அவன் பிரதாபங்களை அள்ளி விட்டுக் கொண்டிருப்பார்: "சீக்கிரம் டோர்னமென்ட் ஆடப் போறான்..மெடல் வாங்குவான்! "

அந்த அதிசயமும் நடந்தது. ஸ்ரீகாந்த் சண்டை போட்டு வாங்கிய மெடலை ஆச்சர்யமாகப் பார்த்தோம். ஒரு வேளை வடிவேலு மாதிரி "அடி வாங்கினது நானு!" என்று லந்து பண்ணி வாங்கி இருப்பானோ??

ஆனால் என்ன காரணமோ, சீக்கிரமே இந்த கராத்தே கூத்து முடிவு பெற்றது.
"அவனுக்கு டான்ஸ்ல தான் ஆர்வம்.." என்று அடுத்த கூத்து ஆரம்பம்..

குழந்தைக்கு உண்மையில் எதில் திறமை இருக்கு என்று புரிந்து கொள்ளாமல், ஆய கலைகள் அறுபத்து நாலையும் அட்டவணை போட்டு குழந்தை மேல் திணிப்பது ஒரு வித ஆர்வக் கோளாறு என்றால் இதிலே இன்னொரு வகையும் இருக்கு:

இந்தப் பயல் தெரு கிரிக்கெட்டில் ஸ்டார். உடனே இவனோட அப்பா, பையனை கிரிக்கெட் கோச்சிங்கில் சேர்த்து விட்டார். கிரிக்கெட் கிட்டும் வாங்கிக் கொடுத்தார், - ரொம்ப நல்லது.
தினமும் பயலை க்ளாசுக்கு கூட்டிப் போவார் - ரொம்ப ரொம்ப நல்ல விஷயம்.

அதோடு நிற்காது, "உனக்கு ஸ்பின் வரலை, நீ பாச்ட் பௌலிங் கத்துக்கோ, உனக்கு பீல்டிங் ப்ராக்டிஸ் வேணும், உன் கவர் டிரைவ் சரியாவே இல்லை, அந்தப் பயனைப் பார்.." என்று அட்வைஸ் மழை பொழிந்து, ஒரே வாரத்தில் மகன் "நான் கோச்சிங் போகலை" என்று சொல்லி விட்டான்.

பிருந்தா வீட்டில் இந்த ரெண்டு தவறுகளும் நடந்திருக்காது என்று நம்புகிறேன். My best to Krishnan.

1 comments:

geetha said...

u r right. lots of parents learn it later (including me!). ---geedhu